ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஏஜென்ட்! சித்தாண்டி விசாரணையில் சிக்கும் TNPSC அதிகாரிகள்

கல்வி தமிழகம்

குரூப் 4 தேர்வு முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சித்தாண்டியிடம் சிபிசிஐடி போலீசார் இரவு பகலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் குரூப் 4 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பது பூதாகரமாக வெடித்துள்ளது. இதில் சிவகங்கையைச் சேர்ந்த ஆயுதப்படை காவலரான சித்தாண்டி முறைகேடாகத் தனது குடும்பத்துக்கே அரசு வேலை வாங்கிக் கொடுத்தது தெரியவந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருப்பத்தூரில் சித்தாண்டியை கைது செய்த போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்றுவரை குரூப் 4 தேர்வில் 17 பேரும் குரூப்2 ஏ தேர்வில் 13 பேரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் புற்றீசல் போல் கைது எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

முக்கிய இடைத்தரகரான ஜெயக்குமாருடன் இணைந்து சித்தாண்டி பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் சித்தாண்டி மூலம் முறைகேடாக அரசு வேலைகளில் சேர்ந்தவர்கள் கைது நடவடிக்கைக்கு அஞ்சி பதுங்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image result for tnpsc scam

அதன்படி சித்தாண்டி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மற்றொரு ஆயுதப்படை போலீஸ் பூபதி என்பவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சக்தி என்கிற நாராயணன், மற்றும் கார்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் கார்த்தி எழிலகத்தில் வணிகவரித்துறை அலுவலகத்தில் உதவியாளராகவும், நாராயணன் விழுப்புரம் மாவட்டம் வடமருதூர் விஏஓவாகவும் பணியாற்றி வந்துள்ளனர்.

இதுமட்டுமின்றி நாராயணன், குரூப் 4 முறைகேட்டில் முக்கிய இடைத்தரகராக இருக்கும் ஜெயக்குமாருக்கு விழுப்புரம் மாவட்ட ஏஜெண்ட்டாக இருந்துள்ளார். அரசு தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களிடம் முறைகேடாகப் பணம் பெற்று அதனை ஜெயக்குமாரிடம் கொடுத்து விஏஒ வேலை வாங்கி கொடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனி ஏஜெண்டை நியமித்து அவர்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டு வந்த ஜெயக்குமாரை சிபிசிஐடி தேடி வருகிறது. ஆனால் அவரை கைது செய்வதைத் தடுக்க போலீசாருக்கு அரசியல் நெருக்கடி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஜெயக்குமாரை போலீசார் நெருங்கிவிட்டதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் சிபிசிஐடி வட்டாரங்கள் கூறுகின்றன. அப்போது டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் பல முடிச்சுகள் அவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது.