துப்பாக்கி, பட்டாகத்திகளுடன் மோதிக் கொண்ட கல்லூரி மாணவர்கள்!- அதிர்ச்சி வீடியோ !! பரவும் துப்பாக்கி கலாச்சாரம்!

தமிழகம் மாவட்ட செய்திகள்

சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே கத்தி மற்றும் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபடுவது, மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது என்பதும் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் நேற்று பிரபல கல்லூரி மாணவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து ஆயுதங்களுடன் தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த பொத்தேரியில் எஸ்ஆர்எம் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் இரு குழுக்களாக கேன்டீனுக்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலின்போது கத்தி மற்றும் துப்பாக்கியைப் பயன்படுத்தியது அங்கிருந்த சக மாணவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்த்த சில மாணவர்கள் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதில் மாணவர்கள் சர்வ சாதாரணமாகக் கத்தி மற்றும் துப்பாக்கியைப் பயன்படுத்தி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வது பதிவாகியுள்ளது.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த வீடியோ காட்சிகளில் இடம்பெற்றுள்ள மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

முன்னதாக, வண்டலூர் அருகே உள்ள வேடமங்கலம் பகுதியில் கல்லூரி மாணவர் முகேஷ் அவருடைய நண்பரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி சென்னையில் கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்திகளுடன் பேருந்துகளில் வன்முறையில் ஈடுபடுவது என்பதும் தொடர்கதையாகி வந்தது. இந்தச் சூழலில் பிரபல தனியார் கல்லூரி மாணவர்கள் கத்தி மற்றும் துப்பாக்கிகளுடன் மோதிக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவர்கள் கைக்குத் துப்பாக்கி எப்படி வந்தது என்று பொது மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், இதுபோன்று மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் கல்லூரி நிர்வாகமும் காவல் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.