டெல்லியில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி எம்எல்ஏவை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிசூடு; கட்சித்தொண்டர் பலி!

TRENDING NOW அரசியல்
டெல்லியில் தேர்தலில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. நரேஷ் யாதவை குறிவைத்து மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கட்சித்தொண்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்

 

வெற்றி பெற்ற ஆம்ஆத்மி எம்.எல்.ஏ

புதுடெல்லி:

டெல்லி சட்டசபைக்கான தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி தலைநகரில் தங்கள் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது.

இதற்கிடையில் டெல்லியில் உள்ள மெஹ்ரௌலி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றி பெற்றவர் நரேஷ் யாதவ்.

இவர் மெஹ்ரௌலி தொகுதியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக இன்று அதிகாலை தனது தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். சாமி தரிசனத்தை முடித்தவுடன் தனது ஆதரவாளர்களுடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

அருணா அசப் அலி மர்க் சாலையில் நரேஷ் யாதவ் சென்றுகொண்டிருந்த போது அவர் பயணித்த காரை குறிவைத்து மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

4 முறை நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் நரேஷ் யாதவ் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினார். ஆனால் இந்த துப்பாக்கிச்சூட்டில் ஆம் ஆத்மி கட்சி ஆதரவாளர்களில் ஒருவருக்கு உடலில் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஒரு ஆம் ஆத்மி கட்சி தொண்டரும் காயமடைந்தார்.
இதையடுத்து படுகாயமடைந்த நபர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்டவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

தேர்தலில் வெற்றிபெற்ற முதல் நாளே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ பார்க்க: