டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஆதார் கட்டாயம் !!! தேர்வு எழுதுபவர்கள் பாருங்க !!

கல்வி தமிழகம்

குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், இனி டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளில் பணம் கொடுத்து பலர் வேலைக்கு சேர்ந்தது வெளிச்சத்துக்கு வந்த நிலையில் இதுகுறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் பல அரசு அதிகாரிகள் கைதாகி வருகின்றனர்.

இந்தநிலையில் முறைகேடுகளைத் தவிர்க்கும் வகையில் சில முக்கிய முடிவுகளை டிஎன்பிஎஸ்சி எடுத்துள்ளது. அதன்படி அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றுவதாகத் தெரிவித்து 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

*தேர்வு நடைமுறைகள் முழுவதும் நிறைவடைந்த பின், இறுதியாகத் தேர்வான நபர்கள் குறித்த அனைத்து விவரங்களும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும். இதன் தொடக்கமாக 2019 தொகுதி 1 தேர்வு நடைமுறைகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் தேர்ச்சி பெற்ற 181 தேர்வர்களின் விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

*”தேர்வு நடவடிக்கைகள் முழுவதுமாக நிறைவு பெற்ற உடன், தேர்வர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை இணையதளம் மூலமாக உரியக் கட்டணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். இந்த நடைமுறை ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

*தேர்வு முடிந்து கலந்தாய்வு நடைபெறும் நாட்களில் அந்தந்த நாளின் இறுதியில் துறை வாரியாக, மாவட்ட வாரியாக, இட ஒதுக்கீடு வாரியாக நிரப்பப்பட்ட இடங்கள் மற்றும் காலி இடங்களின் விவரம் இணையதளத்தில் வெளியிடப்படும். இம்முறையும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.

*இனிவரும் காலங்களில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க, தேர்வர்களுக்கு அதிக சிரமம் ஏற்படாத வகையில் தேர்வாணையமே தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்யும்.

*அதுபோன்று ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்வதைத் தடுக்கும் வண்ணம் விண்ணப்பிக்கும்போது ஆதார் எண் அளிப்பது கட்டாயமாக்கப்படும். தேர்வர்களின் விரல் ரேகையை ஆதாரோடு ஒப்பிட்டு உண்மைத் தன்மையைச் சரிபார்த்த பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்படும்.

*இனிவரும் தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கு முன்பாகவே முறைகேடுகள் ஏதேனும் இருந்தால் அதனை முன்கூட்டியே அறிந்து முழுவதும் தடுக்கும் வண்ணம் உயர் தொழில்நுட்பத் தீர்வு வரவிருக்கும் தேர்விலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்” என்று அறிவித்துள்ளது.

முன்னதாக வங்கி கணக்கு தொடங்குவது, சமையல் கியாஸ் வாங்குவது ஆகியவற்றுக்காக ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முறைகேடு காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.