5, 8 பொதுத் தேர்வு ரத்து! மாணவர்கள் மகிழ்ச்சி !! – அரசுக்கு நன்றி !

கல்வி தமிழகம்

5,8ஆம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடைபெறும் என்று வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்வதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில் 2017 முதல் 11ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வைக் கொண்டு வந்தது பள்ளிக்கல்வித் துறை. இதற்காகக் கடந்த நவம்பர் 28ஆம் தேதி பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டது. 8ஆம் வகுப்புக்கு மார்ச் 30 தொடங்கி ஏப்ரல் 17 வரையிலும், 5ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 15 தொடங்கி ஏப்ரல் 30ஆம் தேதி வரையிலும் தேர்வு நடைபெறும் என்று அறிவித்தது.

Image result for 5-and-8-public-exam-cancel"

இந்த அறிவிப்பு வெளியான நாள் முதலே மாணவர்கள் மன உளைச்சலில் இருப்பதாக பெற்றோர்களும், கல்வியாளர்களும் பொதுத் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். அதோடு மாணவர்களுக்குத் தேர்வுக் கட்டணம் மற்றும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டும் பள்ளி வேளையில் நடைபெறும் சிறப்பு வகுப்பில் கலந்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படுவதற்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்குத் தொடரப்பட்டது. இதில், தேர்வில் தோல்வியடையும் மாணவர்களின் மனநிலை குறித்து பதில் அளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பொதுத் தேர்வை ரத்து செய்யாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி அறிவித்திருந்தார்.

எதிர்க்கட்சிகளோடு அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாமகவும், 5,8 பொதுத் தேர்வுகளை எதிர்த்து போராட்டம் அறிவித்தது. அப்போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பாமக நிறுவனர் ராமதாஸிடம் பொதுத் தேர்வு பற்றி போனில் பேசினார்.

5 , 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்ட போதிலும், அத்தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என்று அரசு ஆணையிட்டிருப்பதாகவும், இதுகுறித்து அரசாணையிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பாமக நடத்தத் திட்டமிட்டிருந்த போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை அடுத்த ஆண்டு முதல் கைவிடுவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்கும் என அமைச்சர் உறுதியளித்தார். இதை ஏற்றுப் போராட்டத்தைக் கைவிட்டது பாமக.

இவ்வாறு மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சியினர் எனப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (பிப்ரவரி 4)வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்றுப் பொதுத்தேர்வு முறை ரத்து செய்யப்படுகிறது. 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பழைய தேர்வு முறை தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார். இது பொதுத் தேர்வுக்குப் பதற்றத்தோடு தயாராகி வந்த மாணவர்களுக்கு ஆறுதலையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.